

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் கல்வி அறக்கட்டளையை மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி பங்கேற்று, 89 மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி அறக்கட்டளை பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தனது ஒரு மாத எம்எல்ஏஊதியத்தை திமுக மகளிரணி கல்வி அறக்கட்டளைக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மயிலை த.வேலு எம்எல்ஏ, மகளிர் அணி துணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், மகளிரணி புரவலர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.