Published : 02 Mar 2022 05:57 AM
Last Updated : 02 Mar 2022 05:57 AM

விருத்தாசலம்: திருநங்கையை மங்கையாக அங்கீகரித்து குடும்பத்தினர் நடத்திய மஞ்சள் நீராட்டு

திருநங்கை நிஷாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய குடும்பத்தினர்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவரை மங்கையாக அங்கீகரித்து, அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடியுள்ளனர்.

பதின்ம வயதில் தாங்கள் மூன்றாம் பாலினம் என அறிந்த நபர்கள் பெரும்பாலானோர், தங்கள் குடும்பத்தை விட்டு விலகி, மூத்த திருநங்கைளிடம் தஞ்சமடைவதை வாடிக்கையாக கொண் டுள்ளனர்.

அந்த திருநங்கைகள் தங்கள் குடும்ப விவரத்தைக் கூட யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று திருநங்கையின் குடும்பத்தாரும், அந்தநபர் குறித்த எந்த தகவலையும் யாருக் கும் தெரிவிப்பதில்லை.

தற்போது ஏற்பட்டு வரும் விழிப்புணர்வால், திருநங்கைகளுக்கான குடும்ப அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், திருநங்கை ஒருவரை மங்கையாக அங்கீகரித்து அவரின் குடும்பத்தினரே முன்நின்று மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தியுள்ளனர்.

விருத்தாசலம் இந்திராநகரில் வசிக் கும் கொளஞ்சி-அமுதா தம்பதியி னரின் மகன் நிஷாந்த் (21). இவரது தந்தை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராகவும் பணிபுரிந்து வரு கின்றனர்.

நிஷாந்த் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். தன் உடலின் பாலியல் செயல்பாடுகள் மாற, தான் ஒரு திருநங்கை என்பதை அவர் உணர்ந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைய, பின் தனது பெயரை நிஷா என மாற்றிக் கொண்டார்.

நிஷாவின் உணர்வுக்கு மதிப்பளித்து, உயிரியல் யதார்த்ததை உணர்ந்த அவரது பெற்றோர் நிஷாவை வீட்டுக்கு அழைத்தனர்.

பின்னர் அவருக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது முழுமையான திருநங்கையாக நிஷா மாறியுள்ளார்.

அவருக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அவரை மங்கையாக அவரது பெற்றோர் அங்கீகரித்துள்ளனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர். நிஷாவுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, விருந்து உபசரிப்பில் பங்கேற் றனர்.

பொதுவாக ஒரு நபர் சிகிச்சை மூலம் திருநங்கையாக மாறிய பின், மூத்த திருநங்கைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு ஐக்கியமாகி விடுவது வழக்கம்.

அவ்வாறு ஐக்கியமாகும் நபருக்கு மூத்த திருநங்கைகள், மஞ்சள் நீராட்டு விழா நடத்தி, அவரை பெண்ணாக அங்கீகரிப்பதுண்டு. இந்நிகழ்வை முதன்முறையாக ஒரு திருநங்கையின் குடும்பத்தினரே செய்தி ருப்பது குறிப் பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து, அவருக்கு அவரது குடும்பத்தினரே விழா நடத்தியிருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x