Last Updated : 22 Jun, 2014 04:09 PM

 

Published : 22 Jun 2014 04:09 PM
Last Updated : 22 Jun 2014 04:09 PM

போராட்டக் களமாக மாறும் தேனி: மீண்டும் விசுவரூபம் எடுக்கும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை காரணமாக தேனி மாவட்டம் போராட்டக் களமாக மாறி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பலன் அடைகின்றனர்.

முட்டுக்கட்டை போடும் கேரள அரசு

இந்த நிலையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள, கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் வரவேற்றனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.

இதற்கு காரணம்? குமுளி ஆனவச்சால் அருகே புல்தகிடியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில், பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த மணல் கொட்டி சமப்படுத்தும் முயற்சியில் கேளர வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அணையின் தண்ணீர் மட்டத்தினை உயர்த்தாமல் இருக்க பல்வேறு முட்டுக்கட்டைகள் போடும் முயற்சியில் அம்மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக என அனைத்து கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கேரள அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பழங்குடி இன மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினரும் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டத்தை நடத்த தொடங்கி விட்டனர். சில சமூக அமைப்புகளும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பெரியாறு அணை விவகாரத்தால், தேனி மாவட்டம் போராட்டக் களமாக உருவெடுக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதுகுறித்து, தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் நமது செய்தியாளரிடம் கூறுகையில், கேரள அரசு பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த வேண்டும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைப்பதை உடனடியாகக் கைவிடவேண்டும். இதனை வலியுறுத்தி வழக்கறிஞர்கள், விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி கேரளத்தை நோக்கி மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் செல்லும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

முல்லை பெரியாறு அணையின் மீட்புக்குழு தலைவர் ரஞ்சித் கூறுகையில், 142 அடியாக நீர் மட்டத்தினை உயர்த்துவதைத் தடுக்க, கேரள அரசு ஜூன் 30-ம் தேதி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதாக தகவல் தெரிய வந்துள்ளது. அதனால் 28-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மூவர் கொண்ட குழுவை அமைத்து அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட்டால், போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x