

அதிமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளியானது. தொடர்ந்து 9-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி முடிவடைகிறது.
அதிமுக வேட்பாளர்களை பொறுத்தவரை, 22 அல்லது 29-ம் தேதி மனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டதும், ஒரே நாளில் 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், மனுத்தாக்கல் தொடர்பான விவரங்கள், சேர்க்க வேண்டிய இணைப்பு ஆவணங்கள், தேர்தல் விதிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. முதல்வர் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அனைத்து வேட்பாளர்களுக்கும் இந்த கையெடு அனுப்பப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.