

வேலூர் அடுத்த பென்னாத்தூர் கேசவபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பதாக பெற்றோர் புகார் தெரி விக்கின்றனர்.
மேலும், பள்ளியில் சேதமடைந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டவில்லை என கூறப்படுகிறது. தற்போது, பயன்பாட்டில் உள்ள 2 வகுப்பறைகள் மற்றும் மரத்தடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு பூட்டு போட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் வேலூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கேசவபுரம் தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றதுடன், கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதனை யேற்ற பெற்றோர் மறியலை கைவிட்டு தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.