உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப உதவிய மத்திய , மாநில அரசுகளுக்கு ஆரணி மாணவி நன்றி

மாணவி தீபலட்சுமி
மாணவி தீபலட்சுமி
Updated on
1 min read

உக்ரைன் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப உதவிய தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு ஆரணி மாணவி தீபலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 6-வது நாளாக நேற்றும் நீடித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 42 மருத்துவ மாணவர்கள், உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தமிழக அரசு மூலமாக இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவி மட்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதேபோல், மற்றவர்களையும் விரைந்து மீட்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, “உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க பிள்ளைகளை அனுப்பி வைத்துள்ளோம். இப்போது யுத்தம் நடைபெறுவதால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.அவர்களை உயிருடன் மீட்டு கொண்டு வர மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்” என்றனர்.

இதற்கிடையில், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் வசிக்கும் நெசவு தொழிலாளி தயாளன் மகள் தீபலட்சுமி நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்தவரை, இந்திய அரசின் நடவடிக்கையால் தாயகம் திரும்பினார். வீட்டுக்கு வந்தவரை ஆரத்தழுவி, அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மாணவி தீபலட்சுமி கூறும்போது, “உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள், உணவின்றி அவதிப்படுகின்றனர். யுத்தம் தீவிரமடைந்துள்ளதால் உயிர் பயத்தில் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்னை மீட்டு கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in