

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மயானக்கொள்ளை திருவிழா பாதுாகாப்பு பணியில் 1,100 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், வேலூர் மாநகரில் இன்று காலை 11 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மயானக்கொள்ளை திருவிழா இன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாலாற்றங்கரை பகுதியில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், மின்துறை, தீயணைப்பு, சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆயத்த கூட்டமும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழாவுக்காக சுமார் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபடவுள்ளனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 600 காவலர்கள் ஈடுபட உள்ளனர். மயானக்கொள்ளை விழா அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலத்தை காலை 12 மணிக்கு முன்பாக தொடங்கி மாலை 7 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் புதிய பாலாறு பாலம் வழியாக காட்பாடிக்கு இன்று காலை 11 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழைய பாலாறு பாலம் வழியாக வேலூர்-காட்பாடிக்கு இரு வழிப்பாதை போக்குவரத்து இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும்.
பெங்களூரு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து வேலூர் வரும் பேருந்துகள் கொணவட்டம், பழைய பைபாஸ், கிரீன் சர்க்கிள் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அதேபோல், பெங்களூரு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து வேலூர் வழியாக சித்தூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திருவலம், சேர்க்காடு வழியாக சித்தூர் செல்ல வேண்டும்.
மேலும், சித்தூரில் இருந்து வேலூர் வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து விஐடி, ஈ.பி கூட்டுச்சாலை, திருவலம், ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக செல்ல வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.