சட்ட விரோத விசைப்படகு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு: புதுக்கோட்டை ஆட்சியரிடம் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் மனு

புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்படகு மீனவர்கள்
புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்படகு மீனவர்கள்
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் விசைப்படகு மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என ஆட்சியரிடம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (மார்ச் 1) புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமார் 550 விசைப்படகுகள் மூலமும், 32 நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாட்டுப்படகு மீன்பிடி தொழில் செய்யும் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. இதைக் தட்டிக் கேட்கும் நாட்டுப்படகு மீனவர்களின் படகுகளை தங்களது விசைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பதோடு, வலைகளை அறுத்து விடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியரிடம், 32 நாட்டுப்படகு மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து ஜனநாயக மீனவர் தொழிலாளர் சங்கத் தலைவர் க.சி.விடுதலைக்குமரன் கூறியது: ''கரையில் இருந்து சுமார் 6 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கக்கூடாது. ஆனால், இந்தப் பகுதியில் ஒரு சில விசைப்படகுகள் மூலம் தொடர்ந்து மீன்பிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு, அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பதால் கடலின் அடியாழம் வரையுள்ள மீன், நண்டு குஞ்சுகளையும் விட்டு வைக்காமல் பிடித்து செல்லப்படுகிறது.

இதனால், போதிய மீன் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இருந்து திரும்ப வேண்டியுள்ளது. தட்டிக்கேட்டால் தங்களது விசைப்படகுகள் மூலம் நாட்டுப்படகுகளை இடித்து மூழ்கடிப்பதோடு, வலைகளை அறுத்து விடுகின்றனர்.

இது குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர், அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் தீர்வில்லை. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். பேச்சுவார்த்தையின் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உத்தரவாதம் அளித்துள்ளார்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in