சிதம்பரம் நடராஜர் கோயில் | தேவாரம் - திருவாசகம் பாடச் சென்றவர்கள் 2-வது நாளாக தடுத்து நிறுத்தம்: 20 பேர் கைது

சிதம்பரம் நடராஜர் கோயில் | தேவாரம் - திருவாசகம் பாடச் சென்றவர்கள் 2-வது நாளாக தடுத்து நிறுத்தம்: 20 பேர் கைது
Updated on
1 min read

கடலூர்: இரண்டாவது நாளாக தெய்வத் தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் தேவாரம் - திருவாசகம் பாடச் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் ஆறு நாள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (பிப்.28) தெய்வத் தமிழ் பேரவையினர் தேனி மாவட்டம் குச்சனூர் வடகுரு மடாதிபதி, ராஜயோக சித்தர்பீடம் குச்சனூர் கீழார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக தேவாரம் - திருவாசகம் பாடிக் கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கோயில் சிற்றம்பல மேடைக்குச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களைக் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இன்று (மார்ச்.1) இரண்டாவது நாளாக திருவில்லிப்புத்தூர் தெய்வத் தமிழ் திருமுறை வழிப்பாட்டு இயக்க நிர்வாகி மோகனசுந்தரம் அடிகளார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் தேவாரம் - திருவாசகம் பாடியபடி கோயிலை நோக்கிச் சென்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து மோகனசுந்தரம் அடிகளார் சாலையிலேயே சிவபூஜை செய்தார். பின்னர் தேவாரம் - திருவாசகம் பாடினார். இதனையடுத்து போலீசார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர். நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும், தேவாரம் - திருவாசகம் கோயில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) பாடிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in