Published : 01 Mar 2022 09:42 AM
Last Updated : 01 Mar 2022 09:42 AM
ரஷ்யா - உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தொழில் துறையினருடன், மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்தாய்வு கூட்டம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. இதில், மத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் குறித்து பேசினார். தொடர்ந்து, தொழில் துறையினரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
கரோனா பாதிப்பில் இருந்துமக்களை மீட்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் கடந்தஆண்டு பட்ஜெட்டில், முக்கியத்துவம் தரப்பட்டது. உள்கட்டமைப்பை உருவாக்க ஒரு ரூபாய் செலவிட்டால் அந்த ஆண்டில் ரூ.2.35-க்குபலன் கிடைக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3.45-க்கு பலன் கிடைக்கும். அதையே உள்கட்டமைப்புக்கு செலவிடாமல் ஒருவருக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அது 80 பைசாஅளவுக்குதான் பலன் தரும். அதனால்தான், உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
உள்கட்டமைப்பை பலப்படுத்த கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1 லட்சம் கோடிதரப்பட்டுள்ளது. இதை 50 ஆண்டுகழித்து செலுத்தினால் போதும்.
ரஷ்யா - உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில், அதாவது 100-வது சுதந்திர நாளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். முன்னதாக, தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் மயங்க்குமார் அகர்வால் தொடக்க உரையாற்றினார். இதில் பல்வேறு துறைகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT