Published : 01 Mar 2022 08:30 AM
Last Updated : 01 Mar 2022 08:30 AM
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை மத்திய அரசு நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எழுதி யுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
மீனவர்கள் அடுத்தடுத்து கைது
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடி கப்பலில் கடந்த 24-ம்தேதி அதிகாலை பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள மயிலாட்டி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 26-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் 27-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையின் கிராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறுகிய காலகட்டங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இவ்வாறு துன்புறுத்தலை எதிர்கொள்வது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மத்தியஅரசுக்கு தமிழக அரசு சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டும்கூட, மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிஉரிமைகளை பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவ சமூகத்தினர் இடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT