Published : 01 Mar 2022 10:15 AM
Last Updated : 01 Mar 2022 10:15 AM

கட்சி அமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் - காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மாநிலம் தமிழகம்: உள்ளாட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவுறுத்தல்

சென்னை

காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மாநில தமிழகம் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்புரையாற்றினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். அகில இந்தியக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சிறப்புரையாற்றினார். ராகுல்காந்தியின் ஆங்கில உரையைத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் தமிழில் மொழிபெயர்த்தார்.

முன்னதாக, மேடைக்கு வந்த காங்கிரஸ் நிர்வாகியின் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்த ராகுல்காந்தி குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அகில இந்தியக் காங்கிரஸ் செயலாளர் வல்லபிரசாத், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள் சு.திருநாவுக்கரசர், விஜய்வசந்த், ஜோதிமணி, முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சென்னை 63-வது வார்டு கவுன்சிலருமான சிவ.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களின் பிரச்சினைகளை மிகவும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடியும். தமிழகம் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மாநிலமாகும். என்னுடைய நாடாளுமன்ற உரையில், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று கூறியிருந்தேன். இந்த கூட்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த வழியில் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலம் தமிழகத்தில் இருக்கிறது. வலிமையான காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் அதை வலிமையானதாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து மிகப்பெரிய சக்தியாக நாம் இருக்கிறோம். இந்தக் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்றால், நாம் நம்மை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி அமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம். உங்களோடு இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். அழகான இந்த தமிழகத்தில், அற்புதமான காங்கிரஸ் கட்சியைக் கட்டமைக்க உதவுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈவிகேஎஸ் வாக்குவாதம்

ராகுல்காந்தி மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மேடையில் பின் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்ததால் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x