Published : 01 Mar 2022 06:30 AM
Last Updated : 01 Mar 2022 06:30 AM

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை தமிழக முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக முழுமையாக அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவர எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது, என குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதையும் தடுக்க வேண்டும், என அறிவுறுத்தினர். மேலும், தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழகத்தில் உற்பத்தியை மட்டும் ஏன் தடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது என்றனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருகிறது. டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மஞ்சப்பை திட்டம்’ பெரிய அளவில் பொதுமக்களை சென்றடைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தவும் தயார் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடையை அமல்படுத்தவது சாத்தியமே. எனவே, தமிழக முதல்வரின் கொளத்தூர், வில்லிவாக்கம், தாம்பரம் தொகுதிகளில் முன்மாதிரியாக முழுமையாக அமல்படுத்தி, அறிக்கையை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24-க்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x