

திருப்போரூரை அடுத்த வெங்கூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து செங்கல்பட்டு - திருப்போரூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகர் கோயில் தெரு, மேட்டுத் தெரு மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒரு கிமீ தொலைவில் உள்ள வெங்கூர் கூட்டுச்சாலைக்குச் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக கிராமப் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக குடிநீர் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாய் இணைப்புகள் வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளன.
அதனால், கிராமப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், முறையாக குடிநீர் வழங்கவும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் இணைப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.