6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை வருகிற நிதியாண்டில் செயல்படுத்த, இம்மாத இறுதிக்குள் டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம் என, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட புதிதாக அமைக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கடந்த ஜனவரி 12-ம் தேதி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், 85 மாணவ-மாணவிகள் சேர்க்கை முடிவடைந்துள்ளது.

இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெற்ற 6 மாணவ-மாணவிகளுக்குப் பாட நூல்கள், மருத்துவ அங்கி, ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றையும், மற்ற மாணவர்களுக்கு மருத்துவ அங்கி ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், கை கணினி விரைவில் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இன்னமும் மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் வராமல் இருக்கின்றன. அம்மாவட்டங்களிலும் வந்துவிட்டால், இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கிற மாநிலமாகத் தமிழகம் உருவாகும்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்த மாத இறுதிக்குள், நானும், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோரும் டெல்லிக்குச் சென்று, 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை வருகிற நிதியாண்டில் செயல்படுத்துவதற்கான வேண்டுகோளை ஒன்றிய அரசிடம் விடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை சிறப்பு அலுவலர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார். எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in