Published : 22 Apr 2016 09:54 AM
Last Updated : 22 Apr 2016 09:54 AM

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு: வேல்முருகன் தகவல்

நெய்வேலியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்கியுள்ள கேமரா சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘நெய்வேலி தொகுதியின் வேட்பாளராக நான் (வேல்முருகன்) போட்டியிடுகிறேன். எனக்கு தொகுதி மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என அனைவரின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவேன்.

என்எல்சியில் உயர் அதிகாரிகள் தொழிலாளர்களை ராஜஸ்தான், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து பழிவாங்கும் நடவடிக்கை மேற் கொள்வதை தடுக்கவும், முந்திரிக்கு அரசே விலை நிர்ணயம் செய்யவும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித் தரவும் நடவடிக்கை எடுப்பேன்.

பண்ருட்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது நான் செய்து கொடுத்த பணிகளை மட்டுமே முன்னிறுத்தி நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன். பெரும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணியோ, பணபலமோ என்னிடத்தில் கிடையாது. மக்களை நம்பி களத்தில் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள் எனக்கு தீவிர களப்பணியாற்ற முன்வந்துள்ளன. என்னை வெளியுலகத்துக்கு படம் பிடித்து காட்டிய கேமரா எனக்கு தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது.

நான் நெய்வேலி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொழிலாளர்கள் பிரச்சினையில் யாருடைய தலைமைக்கும் கட்டுப்பாடாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து உரிமைகளை பெற்றுத் தர முடியும். மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களால் சுயமாக செயல்பட முடியாது. விருத்தாசலம், சேலம் அதிமுக பிரச்சார கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டினை அதிமுக வழங்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x