

வேப்பூர் அருகே சேப்பாக்கம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களை முறத்தால் அடித்தும், தலையில் தீயிட்டு பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 22-ம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இந்த திருவிழாவின் போது குழந்தையில்லா தம்பதியினர் கலந்துகொண்டு வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இக்கிராம மக்களிடம் வேரூன்றி உள்ளது. புதுமணத் தம்பதியினரும் கலந்துகொள்வது இந்தத் திருவிழாவின் சிறப்பாகக் கருதப்படுகிறது.
அவ்வாறு வேண்டுதலோடு வருபவர்களுக்கு கோயில் பூசாரி சிறப்பு பூஜைகள் நடத்தி சில பரிகாரங்களை செய்ய பணித்து அனுப்புவது வழக்கம். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இங்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 5-ம் நாள் திருவிழாவின் போது, சாமி ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் தலையில் தீயிட்டு பொங்கல் செய்து பிரசாதம் வழங்கினர். அதை சாப்பிடும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களின் உடல் சீராகும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. இதனால் அவற்றை பய பக்தியோடு பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர்.
அதேபோன்று 7-ம் நாள் திருவிழாவான நேற்று பூசாரி ஒருவர் கருப்பு உடை அணிந்து, உடலிலும் கருப்பு வர்ணத்தை தீட்டி கையில் முறத்தோடு ஆடிக்கொண்டே வந்தார்.
அவர் எதிரே மண்டியிட்டு வருபவர்களை முறத்தால் அடித்துள்ளார். அவ்வாறு அடித்தால் அவர்களுக்கான தோஷம் நீங்குவதாக கருதப்ப டுகிறது.
இதே போல் நேற்று சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள மணிமுத்தா ஆற்றில் மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.
அப்போது ஆற்றில் மண்ணால் அங்காளம்மன் உருவம் அமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அங்கு வேண்டுதலுக்காக கொண்டு வரப்பட்ட ஆடு, கோழியை பூசாரிகள் சிலர் ராட்சத வேடம் அணிந்து கடித்து பலியிட்டனர். பின்னர் அந்த ரத்தத்தையும் சாமி படையிலில் இருந்த சோற்றில் கலந்து குழந்தை இல்லாதவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதை உண்ணும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என காலம் காலமாக அப்பகுதி மக்கள் நம்புவதால் ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.