

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கி 2 பேர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமான இந்த ஆட்சியினரின் காவல் துறையினரின் செயல்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ''விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மேலும் 17 பேர் மருத்துவமனையிலே சேர்க்கப் பட்டுள்ளார்கள். நெரிசலில் சிக்கிப் பலியான இரு குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் இந்த விபத்துக்குக் காரணமான இந்த ஆட்சியினரின் காவல் துறையினரின் செயல்களுக்கு எனது கண்டனம்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.