

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் குறைந்த வறண்ட தரைக் காற்று வீசும் சூழல் இருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிக மாக இருக்கும். அதுபோல தென் மாவட்டங்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக் கும்.
வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பக்காற்று வீசும். காற்றின் போக்கைப் பொருத்து அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் குறை யவும் வாய்ப்பு இருக்கிறது.
மழையைப் பொருத்தவரை, மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறிப்பாக ஊட்டி, குன்னூரில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பில்லை. திருத்தணி, வேலூரில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் (109.4 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் மட்டும் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வரும் 26-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங் களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 27-ம் தேதி வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.