Published : 28 Feb 2022 09:06 PM
Last Updated : 28 Feb 2022 09:06 PM

மாநில  உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது: பினராயி விஜயன்

சென்னை: கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த விழாவில் , சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, "தமிழர்களும், மளையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள், நாங்கள் சகோதர, சகோதரிகள். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் நூல், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியது மட்டுமின்றி தமிழ் சமூக வரலாற்றையும் கூறுகிறது.

தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மனதில் திராவிடக் கொள்கைகள் எப்படி வேரூன்றியது என்பது குறித்து இந்த நூல் கூறுகிறது. 1960-70களில் இந்தியா அரசியலிலும், சமுதாயத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை படம்பிடித்து காட்டுகிறது உங்களில் ஒருவன் நூல். மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து கட்சியின் தலைவரானார். இப்படி படிப்படியாக உயர்ந்து முதல்வரனார்.

கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x