Published : 28 Feb 2022 06:41 PM
Last Updated : 28 Feb 2022 06:41 PM

திண்டுக்கல் முதல் பெண் மேயர் பதவி யாருக்கு? - திமுக தலைமையின் இறுதிப் பட்டியலில் மூவர்

திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்வு செய்ய வாய்ப்புள்ள கவுன்சிலர்கள் சரண்யா, நித்யா, லட்சுமி. 

திண்டுக்கல்: திண்டுக்கல்லின் முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி, திமுகவினர் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளநிலையில், திமுக கட்சித் தலைமையின் இறுதிப்பட்டியலில் மூன்று பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், திமுகவில் இணைந்த சுயேச்சைகள் என 42 கவுன்சிலர்களுடன் அசுர பலத்தில் உள்ளது திமுக. அதிமுக-5, பா.ஜ.,-1 என எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. இந்நிலையில், திமுக சார்பில் மேயர் பதவியைக் கைப்பற்ற பலரும் முயற்சித்து வருகின்றனர். சிலர் கட்சித் தலைமைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மூலம் மட்டும் அல்லாமல், பிற வழிகளிலும் மேயர் பதவியைப் பிடிக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக்கட்டமாக கட்சித் தலைமை மூவர் பெயரை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் 6-வது வார்டில் போட்டிட்டு வெற்றிபெற்ற பொறியியல் பட்டதாரி மற்றும் எம்.பி.ஏ., படித்த ஓ.சரண்யா, 30-வது வார்டில் போட்டிட்டு வெற்றிபெற்ற லட்சுமி, 37-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நித்யா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களில் ஒருவர்தான் மேயராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாநகராட்சியில் நாளை மறுநாள் 48 கவுன்சிலர்களும் பதவியேற்க உள்ளநிலையில், மேயராக யார் தேர்வு செய்யப்படுவார் என கவுன்சிலர்கள் மத்தியில் மட்டுமின்றி திண்டுக்கல் மாநகர மக்களிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு திமுக கட்சித் தலைமையிடம் இருந்து முறைப்படி திண்டுக்கல் மேயர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இதையடுத்து, வரும் 4-ம் தேதி காலையில் நடைபெறவுள்ள மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற திமுக பெண் கவுன்சிலர்கள் மூவரில் ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். எதிர்க்கட்சி தரப்பில் போதுமான கவுன்சிலர்கள் இல்லாததால் வேட்புமனுத்தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதையடுத்து திமுக வைச் சேர்ந்த கவுன்சிலர் முதல் பெண் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

அன்று மாலையில் நடைபெறும் துணை மேயர் தேர்தலிலும் எதிர்த்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பில்லாத நிலையில், துணைமேயரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். துணை மேயர் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்க உள்ளநிலையில், கட்சியின் இறுதிப் பட்டியலில் திண்டுக்கல் நகர திமுக செயலாளர் ராஜப்பா பெயர் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x