

சென்னை: "ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் நமது விருப்பம். அது கடவுளுக்கும் நமக்குமானது" என்று முதல்வர் ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார். மேலும், காஷ்மீருக்காக தமிழகம் தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்க, பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் , சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா பேசும்போது, "தனது 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தனது செயலால் மக்கள் மனதில் நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர் குறித்த மக்களின் மனநிலையை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிரொலித்துள்ளன.
தமிழகத்திலிருந்த வெகு தொலைவில் ஜம்மு-காஷ்மீர் இருந்தாலும், காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது. தோளோடு தோள் நின்றதை மறக்கமாட்டோம். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தின் பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன.
இந்தியா மிகப் பெரிய நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு. இங்கு வசிக்கும் மக்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்ன அணிய வேண்டும், இஸ்லாமியராக இருப்பவர்கள் என்ன அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது, டர்பன் கட்டுவது எல்லாம் நமது விருப்பம். அது கடவுளுக்கும் நமக்குமானது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் கருத்துகளை கேட்கமாலேயே எங்களது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் எங்குமே இதுபோல நடந்திருக்காது" என்றார்.
முன்னதாக, இந்த விழாவில் பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, "தமிழகத்தில் நிலவும் சமூக நீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையால் கவரப்பட்டு, பீஹாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள இந்த நூலைப் படிப்பவர்கள், அவரது அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது" என்றார்.