Last Updated : 28 Feb, 2022 05:50 PM

 

Published : 28 Feb 2022 05:50 PM
Last Updated : 28 Feb 2022 05:50 PM

”என்னை கைது செய்ய வாருங்கள்; தயாராக இருக்கிறேன்” - அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரத்தில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேச்சு.

விழுப்புரம்: "என்னை கைது செய்ய வாருங்கள்; தயாராக இருக்கிறேன்" என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: ''ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை மறந்து அதிமுகவை எப்படி அழிப்பது என்று 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்படி அவர் வகுத்த திட்டப்படித்தான் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், கைது செய்வதுமாகும். இப்படி செய்தால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்.

திமுகவை அழிக்கவேண்டும் என்று ஜெயலலிதா நினைக்காததால், அண்ணா சாலையில் வைகோ நடத்திய ஊர்வலத்திற்கு தடை விதித்தார். அப்படி தடை விதிக்காமல் இருந்திருந்தால் அவர் அறிவாலயத்தைக் கைப்பற்றி இருப்பார். அப்போதே திமுக அழிந்து இருக்கும். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல எங்களுக்கு பெருந்தன்மை இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விரட்டி அடிக்க வேண்டும் என தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக . திமுகவில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பள்ளம் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தை ஆளும் அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள்.

திமுக அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர். கைதுக்கு அதிமுக என்றைக்கும் அஞ்சியது இல்லை, பலமுறை சிறை பார்த்தவர்கள் தான் அதிமுகவினர். என்னை கைது செய்ய வாருங்கள்... தயாராக இருக்கிறேன்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த தேர்தலில் எதையும் கண்டுகொள்ளவில்லை.

திண்டிவனத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் ஓட்டுக்கு 10 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். திமுகவினரின் வன்முறைக்கு பயந்து சென்னையில் 50 சதவிகித மக்கள் வாக்களிக்க செல்லவில்லை. 5 மணி முதல் 6 மணி வரை கரனோவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டனர். அதனை தடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்'' என்று சி.வி.சண்முகம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x