Last Updated : 28 Feb, 2022 04:17 PM

 

Published : 28 Feb 2022 04:17 PM
Last Updated : 28 Feb 2022 04:17 PM

திமுகவுக்கு அடிமைபோல் செயல்படுகிறது காவல்துறை: ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக சட்டப்பேரவை கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர். | படம்:ஜெ.மனோகரன்.

கோவை: "மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் காவல்துறையினர், திமுகவுக்கு அடிமைபோல் செயல்படுகின்றனர்" என்று அதிமுக சட்டப்பேரவை கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட சாலைகள், பாலங்கள், குடிநீர் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை வேகமாக முடித்திட வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே அதிமுக சார்பில் இன்று (பிப்.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தலைமையேற்று எஸ்.பி.வேலுமணி பேசியது: "12 வழக்குகள் உள்ள ஒரு ரவுடி, கள்ள ஓட்டு செலுத்த வந்தபோது அவரை ஜெயக்குமார் பிடித்துக்கொடுத்துள்ளார். அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்து ஊடகங்களில் அவர் தெளிவாகவும், தைரியமாகவும் தெரிவித்து வந்தார். எனவே, அவரை முடக்கும் நோக்கில் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையே கொலுசு, பரிசுப்பொருள், ஹாட்பாக்ஸ் போன்றவற்றை அளித்துவிட்டு, அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் நியாயப்படி தேர்தல் நடந்திருந்தால் மாநகராட்சியின் 85 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றி பெற்றிருக்கும். மேலும், பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த 5 மணிக்கு பிறகு பல ஓட்டுகள் பதிவாகி உள்ளன. காவல்துறையினரை திமுகவினர் என்ன செய்துவிட முடியும். இடமாற்றம் வேண்டுமானால் செய்யலாம். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் காவல்துறையினர் திமுகவுக்கு அடிமைபோல் உள்ளனர். இது வெட்கமாக இல்லை?

தயவு செய்து காவல்துறையினர், மானம், மரியாதோடு இருக்க வேண்டும். இதற்கு மேலும் பொய் வழக்கு போட்டால் இன்னும் அதிகமானோர் திரண்டு போராடுவோம். எங்கள் மீது எத்தனை வழக்குபோட்டாலும் நாங்கள் அஞ்சமாட்டோம். திமுக பெற்றுள்ள வெற்றி செயற்கையானது. மோசடி செய்து வெற்றிபெற்றுள்ளனர். இது நிரந்தரம் இல்லை. இந்த ஆட்சிக்கு நிச்சயம் முடிவு வரும். தேர்தல் முடிந்தபிறகு மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு மேற்கொண்டோம். அதில் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தில்தான் வாக்களித்தோம் என்றனர். எப்படி அது மாறியது?

மக்களின் முதுகில் குத்தி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர். ஜெயக்குமார் மீதான வழக்குகளை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதிமுகவினர் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் கோவைக்கு இதுவரை திமுக எதுவும் செய்யவில்லை. மோசடி செய்து வெற்றிபெற்றதில் இங்கு திமுக மேயர் பதவியேற்கப் போகிறார். இனிமேலாவது கோவைக்கு எதையாவது செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்எம்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், டி.கே.அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x