நடராஜர் கோயிலுக்கு தேவாரம் - திருவாசகம் பாடச் சென்ற 50 பேர் கைது: சிதம்பரம் போலீஸ் நடவடிக்கை

நடராஜர் கோயிலுக்கு தேவாரம் - திருவாசகம் பாடச் சென்ற 50 பேர் கைது: சிதம்பரம் போலீஸ் நடவடிக்கை
Updated on
2 min read

கடலூர்: நடராஜர் கோயிலில் தேவாரம் - திருவாசகம் பாடச் சென்ற தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த 50 பேரை தடுத்து நிறுத்திய சிதம்பரம் போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஆறு நாள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (பிப்.28) தெய்வத் தமிழ் பேரவையினர் தேனி மாவட்டம் குச்சனூர் வடகுரு மடாதிபதி, ராஜயோக சித்தர்பீடம் குச்சனூர் கீழார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதி தேரடியில் இருந்து ஊர்வலமாக தேவாரம் திருவாசகம் பாடிக் கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கீழ சன்னதி வழியாக கோவில் சிற்றம்பல மேடைக்கு செல்ல முயன்றனர்.

அவர்களை காவல்துறை ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவல்துறையைக் கண்டித்து முழக்கங்களை எழப்பினர். இதனையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்களை கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறுகையில், ''ஆண்டாண்டு காலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடி வந்தனர். பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்து வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கதக்கது.

தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தனி சட்டம் இயற்றி கோயிலை அரசுடமையாக்க வேண்டும். யார் தடுத்தாலும் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடுவதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

தெய்வத் தமிழ் பேரவை அறிவிப்பை ஒட்டி கீழவீதி பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in