

பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிடாத பொருட்கள் மற்றும் செயற்கை நிறமூட்டி தூள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதாவின் உத்தரவின்பேரில், பாப்பாரப்பட்டி, வேலம்பட்டி, பள்ளிப்பட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் பென்னாகரம் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் (பொ) நந்தகோபால் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உணவகங்களில் இருந்த செயற்கை நிறமூட்டி தூள்களையும், உரிய முகவரி, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத மசாலா பாக்கெட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டில்கள் உரியதேதி இல்லாதவைகளை அகற்றினர். இதேபோல நாள்பட்ட பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
‘உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன், உரிய கவச உடைகள், தலையுறை, கையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நாள்பட்ட இறைச்சிகள் உபயோகப்படுத்தக் கூடாது. சமைத்த உணவு மற்றும் இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து பயன்படுத்தக் கூடாது.
சமையல் எண்ணெய்யை ஓரிரு முறைக்குமேல் சூடுப்படுத்தி பயன்படுத்தக் கூடாது. மீதமாகும் சமையல் எண்ணெய்யை உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் அளித்து உரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து உணவகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.