

பெற்றோரால் கைவிடப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகளை ஓசூர் அரசு மருத்துவமனையில் மருதுவக் குழுவினர் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இதில், ஒரு குழந்தையை மத்திகிரி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி கூறியதாவது:
ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பிறந்த 2.6 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள இரு ஆண் குழந்தைகளை பெற்றோர் கைவிட்டனர்.
இதில், ஒரு ஆண் குழந்தைக்கு குடல் வால்வு சுருக்கப் பிரச்சினை இருந்தது. குடல் வால்வு சுருக்கத்தை அரசு மருத்துவமனையில் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மூலமாக சரிசெய்து விடலாம் என உறுதி அளித்தும் அதை ஏற்காத பெற்றோர் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்று விட்டனர்.
இரு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், தாய்மார்களிடம் தாய்ப் பால் பெற்று அக் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றினோம். இதேபோல, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ராம்நாயக்கன் ஏரிக்கரையில் மீட்கப்பட்ட 500 கிராம் எடையுள்ள ஒரு பெண் பச்சிளங்குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் பாதுகாத்து, தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால் பெற்று கொடுத்து வருகிறோம். தற்போது, அக்குழந்தை ஒன்னறை கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
பெற்றோரால் கைவிடப்பட்ட இக்குழந்தைகளை மருத்துவ மனை அவசரப் பிரிவு மருத்து வர்கள் சக்திவேல், அசோக், ராஜசேகர், விஜயன் மற்றும் செவிலியர்கள் சி.ராஜேஸ்வரி, நதியா, பி.ராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பாதுகாத்தும், பராமரித்தும் வருகின்றனர்.
இதில், ஒரு ஆண் குழந்தையை மத்திகிரி அரசு குழந்தைகள் காப்பக மைய இயக்குநர் லிவிங்ஸ்டன் மற்றும் காப்பக சமூக பணியாளர் திலகவதியிடம் ஒப்படைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.