தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு எப்போது?

தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு எப்போது?
Updated on
1 min read

கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைத்து இயக்குவது எப்போது என பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பெரும்பாலான விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம், விடுமுறை நாட்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்குவது போன்ற பணிகளை ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோல், முன்பதிவு இல்லாத ரயில்கள், விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் இணைத்து இயக்க ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அந்தந்த ரயில்வே மண்டலங்களில் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இன்னும் இணைத்து இயக்கப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்காததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், வழக்கமாக மக்கள் வெளியூர்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. விரைவு ரயில்களின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தென்மாவட்ட விரைவு ரயிலகளில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால், கடைசி நேரத்தில் பயணம் கொள்ளும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு விரைவில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாவே இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, 3 மாதங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதால், உடனடியாக ரத்து செய்ய முடியாத சூழல் இருக்கிறது. இருப்பினும், விரைவு ரயில்களில் படிப்படியாக முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in