

திருவள்ளூர் மாவட்டத்தின் 6 நகராட்சிகளின் தலைவர் பதவிகளை அலங்கரிக்கப் போவது யார்? என்பதை அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி ஆகிய நகராட்சிகள் உள்ளன. இதில், திருநின்றவூர், பொன்னேரி ஆகியவை சமீபத்தில்தான், பேரூராட்சிகளாக இருந்து நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாவட்டத்தின் 6 நகராட்சிகளிலும் அதிக வார்டு உறுப்பினர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
இதில், திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகளில், 18-வது வார்டின் திமுக வேட்பாளரான, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பூபதியின் மனைவி சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 20 வார்டுகளில் 17 வார்டுகளை திமுகவும், இரு வார்டுகளை அதிமுகவும் கைப்பற்றின. சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றார்.
நகராட்சித் தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருத்தணி நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக பெண் வேட்பாளர்கள் 9 பேர் அப்பதவிக்கு தகுதியுள்ளவர்களாக உள்ளனர். இருப்பினும், போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட சரஸ்வதிக்குத்தான் நகராட்சித் தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
27 வார்டுகள் உள்ள திருவள்ளூர் நகராட்சியில், 14 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், அதிமுக 3 வார்டுகளிலும், பாமக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இச்சூழலில், திருவள்ளூர் நகராட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பதவியைப் பெற வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களில், ஆதிதிராவிடர் பெண்களான 1, 2, 8,16, 21 ஆகிய வார்டுகளில் வென்ற வே.வசந்தி, பா.உதயமலர், கோ.சாந்தி, ப.இந்திரா, ம.கமலி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இதில், 21-வது வார்டில் வென்ற பட்டதாரி பெண்ணான கமலி மற்றும் 8-வது வார்டில் வென்ற கோ.சாந்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக திமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது
அதேபோல், திருவேற்காடு நகராட்சியின் 18 வார்டுகளில் திமுக 11 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு வார்டையும் கைப்பற்றியுள்ளன சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில், 8-வது வார்டில் வென்ற திமுகவின் திருவேற்காடு நகர செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி நகராட்சித் தலைவராக அதிக சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 21 வார்டுகள் கொண்ட பூந்தமல்லி நகராட்சியில் திமுக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், அதிமுக இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நகராட்சியின் தலைவர் பதவி 17-வது வார்டில் வென்ற, பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமாரின் மனைவி மாலதிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
அதேபோல், புதிதாக உருவாகியுள்ள திருநின்றவூர் நகராட்சித் தலைவர் பதவி, முதல் வார்டில் வென்ற, திருநின்றவூர் நகர திமுக செயலாளர் தி.வை.ரவியின் மனைவி உஷா ராணிக்கும், பொன்னேரி நகராட்சி தலைவர் பதவி 15-வது வார்டில் வென்ற, 2016 சட்டப்பேரவை தேர்தலில் பொன்னேரி(தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியை தழுவிய டாக்டர் பரிமளத்துக்கும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.