

கடுமையான போர் சூழலில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டுவருவது சவாலான பணி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ (சுதந்திர அமுதப் பெருவிழா) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல அலுவலகம் - பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தனித்து நின்று எங்கள் பலத்தை நிரூபிக்க உதவிய மக்களுக்கு நன்றி. விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுவிட்டு, எங்களை விமர்சிப்பதை ஏற்கமுடியாது. முடிந்தால் எங்களைப் போல அவர்களும் தனித்து போட்டியிட்டு, பிறகு பேச வேண்டும். நடக்க உள்ள மறைமுக தேர்தலில் எங்கள் ஆதரவு யாருக்கு என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவரை பலவீனப்படுத்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இவ்வாறு செய்கின்றனர்.
உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவது சவால் நிறைந்த பணி. கடுமையான போர் சூழலிலும், அங்குள்ள 20 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்டு கொண்டுவர மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.