Published : 28 Feb 2022 08:47 AM
Last Updated : 28 Feb 2022 08:47 AM

வேளாண், ஊரக வளர்ச்சித் துறைகள் ஒருங்கிணைந்த செயல் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்: வேளாண்மை துறை அமைச்சர் தகவல்

சென்னை

வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர்கள், தலைமைச் செயலர், ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் பேசியதாவது:

வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்: வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை இணைந்து பணியாற்றும்போது பாசன வாய்க்கால்கள் தூர் வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், பாசன வசதிகளை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், சாகுபடி பரப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள்ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். அதற்கான வழிமுறைகளை இக்கருத்தரங்கில் உருவாக்க வேண்டும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். அரசின் நோக்கங்களை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்: வேளாண் துறை இயந்திரமயம் ஆகியுள்ளது. வயல்களுக்கு டிராக்டர் செல்ல சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதுபோன்ற பணிகளை ஊரக வளர்ச்சித் துறை செய்து கொடுக்கும். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் அதுசார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரிக்க ஊரக வளர்ச்சித் துறை உறுதுணையாக இருக்கும்.

தலைமைச் செயலர் இறை யன்பு: கிராமங்கள் தன்னிறைவு பெறவும், வேளாண் உற்பத்தி பெருகவும், சாகுபடி பரப்பளவு அதிகரிக்கவும், விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகவும், வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறைகள் ஒருங்கிணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளை முடிவு செய்ய இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் விவசாயிகள், பொதுமக்கள் முழு பலனடைவார்கள்.

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை செயலர் பெ.அமுதா: பள்ளிகளில் கழிப்பறை கட்டுவது, வெள்ளத் தடுப்பு பணி, சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. அந்த நிலையை மாற்றி கிராமங்கள் நிலைத்த பயன்பெறும் வகையில் வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறைகள் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் மரியம் பல்லவி பல்தேவ், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், வேளாண் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், வேளாண் துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x