தி.நகர் அதிமுக வேட்பாளர் மீது நிலமோசடி புகார்

தி.நகர் அதிமுக வேட்பாளர் மீது நிலமோசடி புகார்
Updated on
1 min read

சென்னை தி.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியா மீது நில மோசடி வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, கட்சித் தலைமைக்கு தொடர்ந்து புகார் அனுப்பி வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல், கடந்த 4-ம் தேதி வெளியானது. அதன்பிறகு, 6 முறை பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் பல வேட்பாளர்கள் மீது கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியான மறுதினமே பெரம்பலூர், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விருப்ப மனு அளித்திருந்த சிலர், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மீது புகார் அளித்தனர். தற்போது வரை புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க தலைமை உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், தி.நகர் தொகுதி வேட்பாளரான சத்தியா மீது தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சத்தியா மீது நிலமோசடி வழக்குகள் இருப்பதாக கூறி, அதுபற்றிய விவரங்களை இணைத்துள்ளனர். இதனால், சத்தியா தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில வேட்பாளர்கள் மீதும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொதுச் செயலாளரின் முடிவுதான் இறுதியானது. வேட்பாளர்கள் மீது அனுப்பப்படும் புகார்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்தவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in