

பெண் சுற்றுலாப் பயணிகளிடம் புதுச்சேரி போலீஸாரின் உடை பற்றிய பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரிக்கு தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்கள் புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தபடி டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலீஸார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக்கூடாது என்று கூறும் போலீஸாரிடம், “எங்கள் உடை குறித்து உங்களிடம் புகாரளித்தது யார்?” எனக் கேட்கின்றனர் அப்பெண்கள். அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலீஸார் திணறுவபோல் முடிவடைகிறது அந்த வீடியோ.
இதுதொடர்பாக அந்த வீடி யோவில் இருக்கும் பெரியகடை காவலரிடம் கேட்டபோது, “ரோந்துப் பணியின்போது ஆசிரமத்தைச்சேர்ந்த ஒருவர், பள்ளி இருக்குமிடத்தில் அரைகுறையாக ஆடை அணிந்து வருகிறார்கள். அவர்களை கண்டிக்க வேண்டுமெனக் கூறினார். அதனால் அப்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்” என்றார்.