

சிவகாசி மாநகாட்சி முதல் மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேயர் பதவிக்காக நான்கு பேர் பரிந்துரைக்கப்பட் டுள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 24 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக 11, காங்கிரஸ் 6, பாஜக, விசிக, மதிமுக தலா ஒரு வார்டு களிலும், சுயேச்சைகள் 4 வார்டு களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சிவகாசியின் மேயர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக் கப்பட்டுள்ளது. இதனால், இப்பதவியைப் பிடிக்க திமுகவினர் தங்கள் குடும்பப் பெண்களை களம் இறக்கி வெற்றி பெறச் செய்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களில் மேயர் பதவிக்கு திமுக குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களின் பெயர் கள் கட்சி மேலிடத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 35-வது வார்டில் வெற்றி பெற்றவர் விக்னேஷ்பிரியா. இவர் சிவகாசி திமுக நகரச் செயலர் காளிராஜனின் மனைவி ஆவார். 26-வது வார்டில் வெற்றி பெற்றவர் சூர்யா. இவர் திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் சந்திரனின் மகள். 34-வது வார்டில் வெற்றி பெற்றவர் சங்கீதா. இவர் சிவகாசி நகர திமுக வர்த்தகர் அணி துணைச் செயலர் இன்பத்தின் மனைவி ஆவார். 38-வது வார்டில் வெற்றி பெற்றவர் ரேணுநித்திலா. இவர் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனின் உறவினர் ஆவார். இந்த நான்கு கவுன்சிலர்களின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரும் 47-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஜெயராணியின் பெயரும் பரிந்துரையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மாவட்டச்செயலரும் அமைச்சருமான தங்கம் தென்ன ரசுவை தனித்தனியே சந்தித்து பேசினர். இவர்களிடம் மேயர், துணை மேயர் பதவி யாருக்கு என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் சிவகாசி முதல் மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.