Published : 27 Apr 2016 04:39 PM
Last Updated : 27 Apr 2016 04:39 PM

திருமயத்தில் அதிமுக - திமுக இடையே கடும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியைக் கைப்பற்ற திமுக, அதிமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

திருமயத்தில் போட்டியிடும் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்து, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராம.சுப்புராமைக் காட்டிலும் 31,135 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுகிறார் மத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி. திருமயம் அருகேயுள்ள வி.லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சரானார்.

பின்னர், அதே தொகுதியில் 1996-ல் அதிமுக சார்பிலும், 2001-ல் திமுக சார்பிலும், 2011-ல் விராலிமலை தொகுதியில் திமுக சார்பிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதற்கிடையில் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

திருமயம் தொகுதியில் தலா ஒருமுறை வெற்றி பெற்ற வைரமுத்து, ரகுபதி ஆகியோர், மீண்டும் அத்தொகுதியைக் கைப்பற்ற முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். மேலும், இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், முக்கியப் பிரமுகர்களை ரகசியமாக சந்திப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஓரளவு செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் பி.எல்.ஏ.சிதம்பரம் தமாகா சார்பில் போட்டியிடுவது, அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

"மீண்டும் ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள்" என அதிமுக, திமுக வேட்பாளர்களும், "இருவருக்கும் வாய்ப்பு கொடுத்தது போதும், எனக்கு ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள்" என்று தமாகா வேட்பாளரும் வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்து வருவதால் திருமயம் தொகுதி தேர்தல் களம் அனல் பறக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x