Published : 21 Apr 2016 12:37 PM
Last Updated : 21 Apr 2016 12:37 PM

பொதுக்கூட்ட பலி எதிரொலி: தேர்தல் ஆணையம் கண்காணிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம் அதிமுக பொதுக்கூட்டத்தில் கடும் வெயிலின் காரணமாக அதிமுக தொண்டர்கள் இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, கட்சி பொதுக்கூட்டங்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்திகளை அறிந்து பேரதிர்ச்சியும், வருத்தமும், தாங்க முடியாத வேதனையும் அடைந்தேன்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 53 வேட்பாளர்களை ஆதரித்து மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற திடல் பொட்டல் வெளியாக இருந்ததாலும், அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாததாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

மாலை 4.00 மணிக்கு ஜெயலலிதா உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11.00 மணி முதலே பல மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மக்கள் பொதுக்கூட்டத் திடலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

ஒரு பகுதியில் அடைக்கப்பட்ட மக்கள் இயற்கை அழைப்பு உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காகக் கூட அங்கிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நெரிசலும் அதிகமாக இருந்ததால் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தைச் சேர்ந்த பச்சியண்ணன் என்ற 55 வயது முதியவர் மயங்கி விழுந்தார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெரியசாமி என்ற 65 வயது முதியவரும் வெயில் கொடுமை மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

இந்த உயிரிழப்புகளை இயற்கையின் விளையாட்டாக கருத முடியாது. மாறாக மனித உயிர்களை மதிக்காமல் அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போல அடைத்து வைத்து கொன்றதாகவே பார்க்க வேண்டும். இதற்கு முன்பே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 11-ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் வெயில் மற்றும் நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

அதிலிருந்தாவது அதிமுகவினரும், ஜெயலலிதாவும் பாடம் கற்று வெயில் கொளுத்தும் வேளையில் பரப்புரைக் கூட்டங்களை நடத்துவதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 4 மணி நேரம் முன்னதாகவே மக்களைக் கொண்டு வந்து அடைத்து வைப்பதையாவது தவிர்த்திருக்க வேண்டும்.

அதற்கும் ஆளுங்கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் தயாராக இல்லை. அதன் விளைவு தான் ஒரு தனிநபருக்குக்காக இரு அப்பாவிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களாகவே வெயில் கொடுமை மிக அதிகமாக உள்ளது. நண்பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இவ்வளவுக்கு பிறகும் பொதுமக்களை அழைத்து வந்து சுட்டெரிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை சாதாரண விதிமீறலாக பார்க்க முடியாது; மாறாக அப்பாவி ஏழை மக்களின் உயிர்களுக்கு தெரிந்தே, திட்டமிட்டே ஆபத்தை ஏற்படுத்தியதாகத்தான் பார்க்க வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் மகுடஞ்சாவடி பொதுக்கூட்ட சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது பிரிவின்படி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேடையில் தாம் மட்டும் அமர்வதற்காக 20 டன் அளவுக்கு 8 ஆளுயர குளிரூட்டிகளை பொருத்தும்படி நிர்வாகிகளுக்கு ஆணையிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அடிப்படை வசதி கூட செய்து தராததற்கு இதுவே சரியான தண்டனையாக இருக்கும்.

இனிவரும் நாட்களிலாவது இத்தகைய கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் போது அதற்காக அழைத்து வரப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து அதன்பிறகே அனுமதி தர வேண்டும்; கூட்டத்தின் போதும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x