Last Updated : 11 Apr, 2016 12:06 PM

 

Published : 11 Apr 2016 12:06 PM
Last Updated : 11 Apr 2016 12:06 PM

சமகவுக்கு ஒரு தொகுதிதானா?- தெனாலிராமன் கதை கூறிய சரத்குமார்

திருச்செந்தூர் தொகுதியில் சனிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கிய சமக தலைவர் ஆர்.சரத்குமார், 'தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்' என்றார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை காலை 6 மணியளவில் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். சன்னதி தெருவில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். ரதவீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். குழந்தைகளைக் கொஞ்சினார். தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

கைவிட மாட்டேன்

திருச்செந்தூரில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது, ''சுயநலத்துக்காக நான் முடிவெடுத்ததில்லை. கட்சியினரின் தியாகத்தை அறிவேன். உங்களை கைவிட மாட்டேன்' என்றார்.

தெனாலிராமன் கதை

தேர்தலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது பற்றி, நிர்வாகிகள் சிலர் வேதனை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சரத்குமார், ''ஒருமுறை மன்னரின் விரலில் காயம்பட்டதைப் பார்த்த தெனாலிராமன், 'எல்லாம் நன்மைக்கே' என்றார். கோபத்தில் அவரை சிறையில் அடைத்தார் மன்னர். அதன்பின் வேட்டைக்கு சென்ற மன்னரை, காட்டுவாசிகள் தங்கள் தேவதைக்கு பலி கொடுக்க முயன்றனர். அவரது விரலில் காயம் இருந்ததால், உடலில் குறை இருப்பதாக விடுவித்தனர். தெனாலிராமனை மன்னர் விடுதலை செய்தார். அப்போது அவர், 'நீங்கள் என்னை சிறையில் அடைக்காவிட்டால், காட்டுக்கு வந்திருப்பேன். உங்களுக்கு பதில் என்னை பலி கொடுத்திருப்பார்கள்' என்றாராம். அதுபோல் நான் எடுக்கும் முடிவு எல்லாம் நன்மைக்கே' என்றார்.

மீண்டும் அதிமுக

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக அணி வெற்றிபெறும். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில் சமக இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. சிலர், ஏன் தொகுதி மாறினீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். என்னை எங்கே பெருமைப்படுத்த வேண்டும் என முதல்வர் நினைக்கிறாரோ, அதன்படி பயணிக்கிறேன்' என்றார்.

திருச்செந்தூரில் பிரச்சாரத்துக்கு முன்னதாக முருகன் கோயிலில் தனது மனைவி ராதிகாவுடன், சமக தலைவர் சரத்குமார் தரிசனம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x