Last Updated : 27 Feb, 2022 12:41 PM

 

Published : 27 Feb 2022 12:41 PM
Last Updated : 27 Feb 2022 12:41 PM

கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை  பின்பற்றுவது அவசியம்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி: கரோனா 4-வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம் என்பதால், பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.

திருச்சி பெரிய மிளகுபாறை நகர்ப்புற சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று தொடக்கி வைத்தார். பின்னர் அவர்,செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் 1,569 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி தொடங்கியுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2,35,146 பேருக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.

தமிழகம் உட்பட நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். பொதுமக்கள், தாய்மார்கள் ஆகியோரின் முழு ஆதரவு காரணமாக போலியோவை ஒழித்துள்ளோம்.எனவே, இந்த முகாம்களையும் பொதுமக்கள், தாய்மார்கள் பயன்படுத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட வேண்டும்.

கரோனா 4-வது அலை ஜூன் மாதம் வரலாம் என்றும், ஆகஸ்ட் இறுதியில் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கரோனா 4-வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம்.கரோனா 3-வது அலைப் பரவலின்போது தடுப்பூசி இட்டுக் கொள்வது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை பின்பற்றி பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியதுபோல், தொடர்ந்து கடைப்பிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், மாநகராட்சி வார்டு தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் த.புஷ்பராஜ் (54-வது வார்டு), வெ.ராமதாஸ் (55-வது வார்டு), உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x