Published : 23 Apr 2014 11:29 AM
Last Updated : 23 Apr 2014 11:29 AM

நெல்லை அல்வா சுவைக்கப் போவது யார்?

திருநெல்வேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் களத்தில் முந்துவது யார்? என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தொகுதியில் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் தி.மு.க. வேட்பாளர் சி.தேவதாசசுந்தரம், அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், தே.மு.தி.க. வேட்பாளர் எஸ். சிவனணைந்தபெருமாள், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மை.பா. ஜேசுராஜ் ஆகியோர் முக்கிய கட்சி வேட்பாளர்கள்.

தி.மு.க.:

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுசெயலர் க.அன்பழகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்குவங்கி வேட்பாளருக்கு பெரும் பலம். அத்துடன் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என்று தி.மு.க.வினர் நம்புகிறார்கள்.

அ.தி.மு.க.:

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்திருக்கிறார். தொடக்கத்தில் தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்டாத நிர்வாகிகள், முதல்வரின் வருகைக்குப்பின் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே இத் தொகுதியிலுள்ள திருநெல்வேலி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகளின் வசம் உள்ளன. இதனால் இந்த தேர்தலில் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம் என்று அ.தி.மு.க.வினர் மார்தட்டுகிறார்கள்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.சிவனணைந்த பெருமாள் அறிவிக்கப்படுமுன் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்திருந்தார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் 2-வது முறையாகவும் விஜயகாந்த் பாளையங்கோட்டையில் பிரச்சாரம் செய்தார். இதுபோல் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மோடி அலையாலும், மதிமுக, பாஜக, பாமக ஆகிய கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக தே.மு.தி.க.வினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்திருக்கிறார். தனித்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சிக்கென்று இருக்கும் வாக்குவங்கி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அக் கட்சியினர் கருதுகிறார்கள். ஏற்கெனவே எம்.பியாக இருந்தபோது தொகுதிக்கு செய்த சாதனைகளை சொல்லி வேட்பாளர் பிரக்ஷ்சாரம் செய்திருக்கிறார். தொகுதி மக்களுக்கு மிகுந்த பரிட்சையமானவர் என்பதும் ராமசுப்புவுக்கு பிளஸ் பாயின்ட்.

ஆம் ஆத்மி:

ஆம் ஆத்மி வேட்பாளர் மை.பா. ஜேசுராஜ் மற்ற கட்சிகளுக்கு ஈடாக தொகுதியில் பிரச்சாரம் செய்யவில்லை. இறுதிகட்டத்தில் திருநெல்வேலியில் அவரை ஆதரித்து எஸ்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். இந்தமுறை இத் தொகுதியில் புதிதாக வாக்களிக்க இருக்கும் 4 லட்சம் வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து தங்களுக்கு வாக்களிப்பர் என்று அக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

முந்துவது யார்?

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 5 பேரும் களத்தில் முந்த முயற்சிக்கிறார்கள். அவர்களுடன் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் தி. தேவநாதன் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தி.தேவேந்திரன் ஆகியோர் அந்தந்த சமுதாயம் சார்ந்த வாக்குகளை பிரிக்க வாய்ப்பிருக்கிறது. இது முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளில் சரிவை ஏற்படுத்தலாம். தொடக்கத்தில் 5 முனைப் போட்டி இருந்ததாக கருதப்பட்டிருந்தது. கடைசி நேர நிலவரப்படி தி.மு.க., அல்லது அ.தி.மு.க. வேட்பாளரே வெற்றிக் கனியை பறிக்க வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x