Published : 27 Feb 2022 10:41 AM
Last Updated : 27 Feb 2022 10:41 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை: கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களை ராகுல்காந்தி சென்னையில் நாளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணி கொள்கை ரீதியானது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேரை மீட்டு வர மத்திய அரசிடம் விமானம் இல்லை என்பது மோடி அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

சென்னையில் நடைபெற உள்ள முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட உள்ளார். இதற்காக 28-ம் தேதி (நாளை) சென்னை வரும் ராகுல்காந்தி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதில் காங்கிரஸ் கட்சியை தமிழக கிராமப்புறங்களில் இருந்துபலப்படுத்த கருத்து கேட்டு கலந்துரையாடுகிறார்.

திமுகவிடம் பேச்சுவார்த்தை

இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ் தான் மிகப்பெரிய தேசியகட்சி. மேயர் பதவி குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி, கண்டிப்பாக ஒரு நாள் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தமிழககாங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள்ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில், ஐஎன்டியூசி தொழிற்சங்க தலைவர்வி.சி‌.முனுசாமி அமர்ந்து இருந்தார்.

மோதலால் பரபரப்பு

இதற்கு, காங்கிரஸ் நிர்வாகிபன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசினார்.

இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே எழுந்த வாக்குவாதத்தால் மோதல் உருவானது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x