Published : 27 Feb 2022 09:04 AM
Last Updated : 27 Feb 2022 09:04 AM
இனிவரும் காலங்களில் தமிழக முதல்வரின் கோட்டையாக கோவை திகழும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவை காளப்பட்டியில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசும்போது, ‘‘வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை பிரித்து, அதனை வருடம்வாரியாக பிரித்து செயல்படுத்த வேண்டும். திமுக தலைவர் அறிவிக்கும் நபர்களை தலைவர்கள், துணைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும். இந்த வெற்றி, அடுத்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முன் உதாரணமாக இருக்க வேண்டும்,’’ என்றார்.
கூட்டத்துக்குப்பின் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இன்றைய உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுவான பிரச்சினைகளை பட்டியலாக தயாரிக்க அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கான பணிகளை தயாரித்து, அந்த பட்டியலை முதல்வரிடம் கொடுத்து, சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோவைக்கு வித்தியாசம் பார்க்காமல் அனைத்து பணிகளையும் தமிழக முதல்வர் செய்து கொடுத்துள்ளார். வாக்குப்பதிவு நடந்த அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருந்தன. வெளிப்படைத் தன்மையுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதுதான். இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் மற்றும் விநியோகத்துக்கான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. திமுக அரசு 10 ஆண்டுகளுக்கு தேவையான மின்தேவையை கணக்கிட்டு உற்பத்திக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. மாவட்டம் தோறும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் சொல்லவில்லை. அதிமுகவினர் சிலர் மட்டுமே சொல்கின்றனர்.
கோவை இனிமேல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டை. இனிவரும் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் அதை உணர்த்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இக்கூட்டத்தில் பேசிய மாநில மகளிரணி நிர்வாகி மீனா ஜெயக்குமார், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் மீது குற்றம்சாட்டி பேசியதால், கட்சியினரிடையே சிறிதுநேரம் சலசலப்பு எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT