Last Updated : 27 Feb, 2022 09:43 AM

 

Published : 27 Feb 2022 09:43 AM
Last Updated : 27 Feb 2022 09:43 AM

ஏற்காடு மலர்க் கண்காட்சிக்காக 2 லட்சம் விதைகள் 10 ஆயிரம் தொட்டிகளில் விதைப்பு: 40 வகையான மலர்கள் உற்பத்திக்கு நடவடிக்கை

சேலம்

ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சிக்காக 2 லட்சம் விதைகள் 10,000 தொட்டிகளில் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 40 வகையான மலர்கள் கண்காட்சியில் அலங்கரிக்க தோட்டக்கலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பயணிகளால் ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலம் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,970 அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு கோடை காலத்தில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

கோடையில் இங்கு வரும் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.

தற்போது, கரோனா தொற்றுப் பரவல் குறைந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை காலத்துக்கு முன்னர் வெயில் உக்கிரம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், வார விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது, வாரம் முழுவதும் ஏற்காட்டில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஏற்காட்டில் இந்தாண்டு கோடை விழா மலர்க் கண்காட்சிக்கான ஆயத்தப் பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோடை விழா மலர்க் கண்காட்சி ஆண்டுதோறும் மே மாதத்தின் 3 அல்லது 4-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்காக கண்காட்சிக்கு தேவையான மலர்ப் படுகைகள், மலர்ச் செடிகள் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளை கவரும் பால்செம், ஜினியா, கிரைசாந்திமம், பெகோனியா, சால்வியா, காஸ்மாஸ், கார்நேசன் உள்ளிட்ட 40 வகையான மலர்ச் செடிகளை உற்பத்தி செய்ய 2 லட்சம் விதைகள், 10,000 தொட்டிகளில் விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.கோடை விழா மலர்க் கண்காட்சிக்காக, ஏற்காடு அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள நிழல்வலைக் குடிலில் மலர்ச் செடிகளை உற்பத்தி செய்வதற்காக நாற்றுக் கலன்களில் விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.விமானம் மூலம் 4,000 டேலியா மலர் நாற்றுகள் வருகை

“ஏற்காடு ரோஜா எனப்படும் டேலியா வகைப் பூக்களைக் கொண்டு மலர்க் கண்காட்சியின்போது மலர் அரங்கம் அமைக்க கொல்கத்தாவில் இருந்து 4,000 டேலியா மலர் நாற்றுகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு தோட்டக்கலைத் துறை மூலம் நட்டு பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மலர்க் கண்காட்சிக்காக தோட்டக்கலைத்துறை பூங்காக்களை அழகுபடுத்தும் வகையில், புல்வெளிகளை சீரமைப்பது, பூங்காக்களில் ஆங்காங்கே வண்ண மலர்களால் மலர்ப் படுகைகள் அமைப்பது உள்ளிட்ட மலர் அலங்காரப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது நடவு செய்யப்பட்டுள்ள செடிகளில் வரும் மே மாத தொடக்கத்தில் பயணிகளை ஈர்க்கும் வகையில் மலர்கள் பூத்துக் குலுங்கும்” என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x