

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒரு மகளிருக்குக்கூட வாய்ப்பளிக்காதது அதிமுக மகளிரணியினர் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி), செங்கம்(தனி) ஆகியவையாகும். இந்த 8 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் விருப்ப மனுக்களை பெண்களும் கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை வெளியிட்ட வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் ஒரு மகளிருக்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல் 8 தொகுதிகளிலும் ஆண்களே வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால் தி.மலை மாவட்டத்தில் உள்ள அதிமுக மகளிரணியினர் இடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘தி.மலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து கடந்த தேர்தலில் ஜெயசுதா தேர்வு செய்யப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 8 தொகுதிகளில் ஒரு பெண்ணுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் வனரோஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து அம்மா (ஜெயலலிதா) வெற்றிபெறச் செய்தார். ஆனால், இந்த முறை ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு அளிக்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து பெண்கள் பலர் மனு கொடுத்தனர். அவர்களில், ஓரிரு பெண்களை மட்டுமே தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைத்துள்ளனர். அதிமுகவில் செல்வாக்கு என்பது, அம்மாதான்(ஜெயலலிதா).
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் அவர் போட்டியிடுவதாகக் கருதிதான் அதிமுகவினரும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மலை மாவட்டத்தில் ஒரு மகளிருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். காலம் கடந்துவிடவில்லை. வாய்ப்புகள் இருக்கிறது. அம்மா(ஜெயலலிதா) முடிவு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றனர்.