

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஜிம்னாஸ்டிக் வீரருக்கு நரம்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் ஆறுமுக கமலேஷ்(19). மாநில, தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் வீரரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது தோள்பட்டை மூட்டு விலகியுள்ளது. இதை அவரது பயிற்சியாளரே சரிசெய்துள்ளார்.
ஒரு மாதத்துக்குப் பின்,அதிக எடையுள்ள பொருளைத் தூக்கியபோது மீண்டும் தோள்பட்டை மூட்டு விலகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது, கழுத்து முதுகுத்தண்டு பகுதியில் இருந்து இடது தோள்பட்டை வழியாக கை மூட்டுக்குச் செல்லும் 5 நரம்புகளில், 3 நரம்புகளின் செயல்பாடுகள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளைப் பெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, சென்னை அண்னாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆலோசனைப்படி, அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் ஆர்.தர், ஜி.கார்த்திகேயன், மயக்க மருந்து நிபுணர்கள் மகேஷ், எல்.பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, கையில் உள்ள நரம்புகளை மாற்றி இணைத்தனர்.
சிகிச்சைக்குப் பின் பூரணமாக குணமடைந்த ஆறுமுக கமலேஷ், பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் ஆர்.ஸ்ரீதர் கூறும்போது, “ஜிம்னாஸ்டிக் வீரருக்கு நரம்பு மாற்றுஅறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவைசிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. சிகிச்சைக்குப் பின் அவர்நலமுடன் உள்ளார்.
தலைகீழாக நிற்பதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுகிறார். தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் செலவாகும் இந்தஅறுவைசிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.