

ஆம்பூர் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து திமுக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாமக போன்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை மும்முரமாக தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதையறிந்த தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. ஆம்பூரில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கி அதிகமாக இருப்பதால், பிரேமலதா ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு சொந்த ஊர் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமம். இவரது தந்தை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரியாக பணியாற்றியவர். பிரேமலதா ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆம்பூர் தொகுதியில் பிரேமலதாவுக்கு நட்பு வட்டாரமும் உறவினர்களும் அதிகமாக இருப்பதால், சொந்தத் தொகுதியாக ஆம்பூர் கருதப்படுகிறது.
எனவே, தொண்டர்கள் விருப்பப்படி பிரேமலதா ஆம்பூரில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே, பிரேமலதா ஆம்பூரில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரேமலதா மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சித்தலைவர் விஜயகாந்த் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரத்தில் தீவிரமாக மூழ்கியுள்ளதால், தேர்தல் பிரச்சார வேலைகளை பிரேமலதா கவனித்து வருகிறார்.
எனவே, இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஆம்பூரில் அவர் போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இதற்கான இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும். தவிர, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், அதன் வெற்றிக்காக பாடுபடுவோம்’’ என்றனர்.