

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐந்தாம் நாளான நேற்று முதல்வர் ஜெயலலிதா தவிர, மற்ற அதிமுக வேட்பாளர்கள் 226 பேரும் அவரவர் தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), நத்தம் விஸ்வநாதன் (ஆத்தூர்), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), எடப்பாடி கே.பழனிசாமி (எடப்பாடி), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), பா.வளர்மதி (ஆயிரம் விளக்கு), எஸ்.கோகுல இந்திரா (அண்ணாநகர்), முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன் (சைதாப்பேட்டை), பண்ருட்டி ராமச்சந்திரன் (ஆலந்தூர்) உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும், ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக இ.மதுசூதனன் மனு தாக்கல் செய்தார். இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மாற்று வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆர்.சரத்குமார் (திருச்செந்தூர்), செ.கு.தமிழரசன் (மதுராந்தகம் - தனி), தனியரசு (காங்கேயம்), ஷேக் தாவூது (கடையநல்லூர்), நடிகர் கருணாஸ் (திருவாடானை), தமிமுன் அன்சாரி (நாகை), ஆரூண் ரஷீத் (வேலூர்) ஆகிய 7 தொகுதி வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.
ராஜினாமா வேண்டாம்!
தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டால், உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுதொடர்பான ஒரு சுற்றறிக்கையை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், “மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர்கள் உட்பட உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. இதன் அடிப்படையில் வேட்புமனுக்களை நிராகரிக்கக் கூடாது” என அவர் கூறியுள்ளார்.