பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இந்நிலையில், ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து ‘பூணூல் அறுப்பு போராட்டத்தை தொடர்வோம்' என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கு இஸ்லாம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்து முன்னணி புகார்

இந்நிலையில், இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச் செயலாளர் பி.மேகநாதன் கடந்த 21-ம் தேதிமாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ‘இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுகிறார்.

எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினர் இடையே வெறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் தடா ரஹீம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in