Published : 26 Feb 2022 08:32 AM
Last Updated : 26 Feb 2022 08:32 AM

சமூக விரோதிகளை காரணம் காட்டி காவல் துறையினர் உணவக நேரத்தை கட்டுப்படுத்த கூடாது: நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள ஓட்டல்கள் சங்கம்

சென்னை: சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, உணவகங்களை மூடச் செய்வது எலித் தொந்தரவுக்காக வீட்டையே கொளுத்துவதற்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடுஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவகத் தொழில் மக்களின் பசியைப் போக்கும் சேவை சார்ந்த தொழில். இதனால்தான் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தில் உணவகங்களின் வியாபார நேரங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

தற்போது தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை, மருத்துவமனைகள் மற்றும் பல்துறைகளில் பணிபுரிவோர் 24 மணி நேரமும் செயல்படுகின்றனர். பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் உணவு, தேநீர் போன்றவை கிடைக்கச் செய்வது அத்தியாவசிய தேவையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி எண் 21, மக்களுக்குத் தேவையான உணவு அவர்கள் விரும்பும் நேரத்தில் தடையின்றிக் கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதே போன்று விதி எண்19(1)(5) உணவக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை இடையூறு இன்றி நடத்துவதை உறுதி செய்கிறது. தமிழக அரசின் 28.5.19 தேதியிட்ட அரசு ஆணையும் இதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், காவல் துறையினர் உணவகங்களின் வியாபார நேரத்தை கட்டுப்படுத்த முயல்வது அரசு ஆணைக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் முரணானது என உயர் நீதிமன்றம் 3.2.22-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு உணவகங்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது தவறு; மாறாக, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சமூக விரோதிகளின் அச்சுறுத்தலை காரணம் காட்டி, அரசு உரிமம் பெற்று வணிகம் செய்யும் உணவக உரிமையாளர்களின் சட்டப்பூர்வமாக தொழில் நடத்தும் உரிமையில் தலையிடுவது எலித்தொல்லைக்காக வீட்டையே கொளுத்துவதற்குச் சமம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x