Published : 26 Feb 2022 08:11 AM
Last Updated : 26 Feb 2022 08:11 AM
சென்னை: பெரியார் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை என்று சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கத்துடன் கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 2 தொகுதிகள் அடங்கிய இந்நூலை வெளியிட்டார். முதல் தொகுதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் 2-வது தொகுதியை திராவிடர் இயக்க தமிழர் பேரவைபொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனும் பெற்றுக்கொண்டனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வர் புகழாரம்
பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாக வைக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆய்வுஏடாக திகழ்கிறது இந்நூல். பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை பத்திரிகையாளர் திருமாவேலன் திறம்பட செய்திருக்கிறார். இந்நூலில் அவர் பெரியாரின் குரலாக, திராவிட இயக்கத்தின் குரலாக ஒலிக்கிறார்.
100 ஆண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு கல்வியை கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்தான். இந்த இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது. இது பெரியார் மண். தமிழ் இனத்தின் நேரடி எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மறைமுக எதிரிகளை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், கைக்கூலிகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழை காக்க போராட்டங்கள் நடத்திய இயக்கம் திராவிட இயக்கம். தமிழுக்கு செம்மொழியை பெற்றுத் தந்தது, தமிழ்நாடு என பெயர் சூட்டியது, இருமொழிக் கொள்கையை கொண்டுவந்தது இந்த இயக்கம்தான்.
திமுக ஆட்சியில் அரசு பணியில் சேர தமிழ் மொழி தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்கி உள்ளோம். கோயில்களில் தமிழ் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. தமிழ் ஆட்சி, பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி நடக்கிறது. தமிழ் அறிஞர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆட்சி நடக்கிறது.
அனைவருக்கும் முக்கியத்துவம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிடம் என்றால் சமூக நீதி. அனைவருக்கும் அனைத்தும் என்ற லட்சியத்தை நோக்கிய பயணம் அது. பெரியார் இல்லை என்றால் திமுக ஆட்சி இல்லை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றிப் பேசும்போது, ‘‘யாருடைய விமர்சனத்தையும் எதிர்ப்பையும் பற்றி கவலைப்படாதவர் பெரியார். திராவிட இயக்கம் மானுடப் பார்வை கொண்டது.
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதி. யாரையும் ஒதுக்குவதோ அல்லது தள்ளிவைப்பதோ அல்ல அது’’ என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நற்றிணை பதிப்பகத்தின் உரிமையாளர் யுகன் வரவேற்றார். இயக்குநர் அமிர்தம், திருமாவேலனின் தந்தை மு.படிக்கராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுப.வீரபாண்டியன் நூல்அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, நூலாசிரியர் திருமாவேலன் ஏற்புரையாற்றினார்.
அனைவருக்கும் முக்கியத்துவம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT