Last Updated : 26 Feb, 2022 08:38 AM

10  

Published : 26 Feb 2022 08:38 AM
Last Updated : 26 Feb 2022 08:38 AM

‘நான் பிரசாந்த் கிஷோர் அல்ல; மனுதாரர் என்னிடம் ஆலோசனை கேட்டும் வரவில்லை’ - ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் வழக்கில் நீதிபதி கருத்து

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்க குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக, ரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது போலீஸார் இரு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:கோயில்கள் நமது கலாச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை பராமரிக்க வழங்கப்பட்ட நிலங்கள் தனி நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.சுவாமி சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுஉள்ளன. கோயில் ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோயில்கள் புறக்கணிக்கப்படுகின்றன. பூஜைகள்கூட முறையாக நடப்பதில்லை. கோயில்களின் சிறப்புகளை மீட்டெடுக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கோயில்களை யார் நிர்வகிப்பது என்ற அடிப்படை கேள்வியும்எழுகிறது. கோயில்கள் தொடர்ந்து அரசின் கட்டை விரலின்கீழ் இருக்க வேண்டுமா? அரசு அனைத்துமத வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றாக பாவிக்கிறதா? தேவாலயம் மற்றும் மசூதி மீது அரசுகடைப்பிடிக்கும் அதே நிலைப்பாட்டை கோயில்கள் மீதும் கடைபிடிக்க வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற கேள்விகள் எனதுமனதில் குறுக்கிடுகின்றன. மனுதாரரின் நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், சில நேரங்களில் அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வழக்கில் வேணு சீனிவாசன் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் பத்மபூஷண் விருது பெற்றவர். மதிப்புக்குரிய குடிமகன். அவரது தொண்டு அனைவரும் அறிந்ததே. ஏராளமான கோயில்களின் புனரமைப்புக்காக அவர் நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும் செலவிட்டுள்ளார்.

விவாதங்கள், கருத்துகளைநாகரிகமாக வெளிப்படுத்த வேண்டும். துளியளவு வன்முறைக்கும் வித்திடுவதாக இருக்கக்கூடாது. மனுதாரருக்கு உபதேசம்செய்வதற்காக நான் வரவில்லை. நான் பிரசாந்த் கிஷோர் இல்லை. மனுதாரர் என்னிடம் ஆலோசனை கேட்கவும் வரவில்லை. நீதிகேட்டு வந்துள்ளார். அந்த பணியுடன் நிறுத்திக்கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

மனுதாரர் மீது ரங்கம் போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இரு வழக்குகளும் இபிகோ500 மற்றும் 505 (2) பிரிவில்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருவழக்கில் தகவல் தொழில்நுட்பசட்டப்பிரிவு 45-ம் சேர்க்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் குறித்துசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும், பக்தர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைத்ததாகவும் மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தால்தான் இபிகோ 500 மற்றும் 505 (2)-ன்கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்.மனுதாரர் அதுபோன்று செய்யவில்லை. எனவே அவர் மீது இப்பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. தகவல் தொழில்நுட்பசட்டம் 45-வது பிரிவில் உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தீர்வு பெற முடியும். குற்ற வழக்கு பதிவு செய்யமுடியாது. எனவே மனுதாரர் மீதான இரு வழக்குகளும் ரத்துசெய்யப்படுகின்றன இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

பிஹாரை சேர்ந்த பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் 9 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டதும், அவரது வியூகத்தின்படியே திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x